மாநில கல்வி கொள்கைக்கு எதிராக NEET தேர்வு முறை அறிமுகப்படுத்தப்பட்டு, இந்தாண்டு மருத்துவத்துக்கும், அடுத்த வருடம் பொறியியலுக்கும் அமுல்படுத்தப்படவுள்ளது, ஜல்லிக்கட்டு க்ளோபரத்தில் ஹிட் அடிக்காத விவகாரம் தான் இது! ஆனால் மிக முக்கியமான விவகாரம்!
தமிழகத்தின், அறுபது ஆண்டு கால கல்வி புரட்சியை நம்மால் மறுக்கவே முடியாது, அதனால் தான் தில்லி தமிழகத்தின் கல்வி கொள்கையை எதிர்த்து கொண்டே, வட இந்தியர்கள் கல்விக்கும், மருத்துவ வசதிக்கும் இங்கே குவிகிறார்கள். எதிர்காலத்தில் அரசியல் மாற்றம் ஏற்பட்டு, NEET துரத்தி அடிக்கப்படலாம், வழக்கு தொடரலாம், அவை எல்லாமே இரண்டாம் கட்டம் தான்,
நாம் செய்ய வேண்டியது, பிள்ளைகளை அதற்கு தயார் செய்வது, தாலியை அடமானம் வைத்தாலாவது மத்திய அரசு கொண்டு வரும் Standard கல்வியை பிள்ளைகளுக்கு கொடுத்து விட வேண்டும், பதிவுகளோடு விட்டு விடாமல் இயன்ற அளவு பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்களுக்கு கல்விக்கு உதவிட வேண்டும்.
மதிப்பெண் எடுத்து தகுதியாக்கி கொள்ள வேண்டுமென்பது ஒரு யுக்தி மட்டுமே, கல்வி மறுக்கப்பட்ட சமூகத்தில் இருந்து வரும் பிள்ளைகள் சறுக்குவது இந்த இடத்தில் தான், தமிழக கல்வி கொள்கையால் இன்று ஓரளவு அந்த பிரச்சனையில் இருந்து மீண்டு வந்து விட்டோம், நாமக்கல்லில் கோழிகளை போல மாணவர்களை உற்பத்தி செய்கிறார்கள் என்கிற பிதற்றல் எல்லாம் எல்லோர் வீட்டு பிள்ளைகளும் மதிப்பெண் எடுக்க தொடங்கிய பின்னர் தான்.
அரசு பள்ளியின் தரத்தை உயர்த்த வேண்டும், அரசு பள்ளியில் படிக்க வேண்டும் என சமுத்திரக்கனி தனமாக பேசி கொண்டிருக்கும் அதே வேளையில், இந்த புரட்சியை எல்லாம் எதையும் காதில் வைத்து கொள்ளாமல், மது பழக்கமில்லாமல், சிகரெட் பிடிக்காமல், நாலு பேருக்கு உதவவும் செய்யாமல் மிக சாமர்த்தியமாக ஒரு சாரார் கல்விக்கு என்று செலவு செய்து தங்கள் வீட்டு பிள்ளைகளை மட்டும் எந்த தேர்வையும் எழுத தயார் செய்து கொண்டே இருப்பார்கள்.
பணம் இருக்கிறவனும், சமூகத்தில் ஆதிக்கமான அந்தஸ்த்தில் இருப்பவனும் எந்த ரிஸ்க்கும் எடுக்கலாம், பணக்காரன் ரப்பர் செருப்பு போட்டால் சிம்பிளிசிட்டி என்பார்கள், அதே வறண்ட முகம் உள்ளவன் போட்டால், மேலும் கீழும் பார்ப்பார்கள். டீ கடை வைத்து பெரிய ஆளா ஆனவன் என ஒரு நாயரை காமிப்பார்கள், உள்ளூர்ல தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவன் கடை திறந்தால் சாதியை அலசுவார்கள், வளர விட மாட்டார்கள்!
இவ்ளோ தான் நம்ம சமூகம், இங்கே எல்லோரும் ஒரே மாதிரி அல்ல. படித்து முன்னேறி உயர்கல்வி வரை சென்று விட்ட மாணவர்கள் கூட தற்கொலைக்கு உட்படுத்தி, கொலை செய்யும் தேசமிது, கற்றவனுக்கே அந்த நிலை என்றால் கல்லாதவன்? கல்வி எவ்வளவு முக்கியவத்தம் வாய்ந்தது என்பதை உணர வைக்க வேண்டும், பின்தங்கிய சமூகங்களுக்கு இடதுசாரி, முற்போக்கு தோழர்கள் உதவ வேண்டும்!
ரத்தமின்றி, கத்தியின்றி ஒருவனை கொலை செய்யும் சமூகமிது, அப்படியான ஒரு கொலை தான் ரோஹித் வெமுலாவின் கொலை, யாரையுமே குற்றம் சாட்ட முடியாத கொலை, ஆனால் அது ஒரு மிகப்பெரிய ஜனநாயக கொலை என்பதை ஒப்புக்கொள்வதும் கூட இங்கே சிறுபான்மை கூட்டம் தான்.
சொல்வதற்கு வேதனை தான்; இப்படி எவ்வளவோ கொலைகள் நடந்தாலும், போராடி, பேசி, மரணித்து, அந்த மரணத்தை உலகுக்கு எடுத்து காட்டவாவது கல்வி வேண்டும்! அதனால் தான் இன்று ரோஹித் குறித்து பேசி கொண்டிருக்கிறோம்! ஊடகத்திலும், சமூக செயற்பாட்டு தளத்திலும் கற்றவர்கள் இருப்பதால் தான் இதையெல்லாம் குறித்து விவாதிக்கும் தளம் நமக்கு ஏற்பட்டு இருக்கிறது, மாநிலம் கடந்த பிரச்சனையாக இருந்தாலும், நம்மால் இங்கே என்ன செய்திட வேண்டுமோ அதை செய்திட தான் வேண்டும்.
ஜல்லிக்கட்டு பொது பிரச்சனையாகி விட்டது, கூட்டம் கூடத்தான் செய்வார்கள், போராடத்தான் செய்வார்கள், இதே கூட்டம் ரோஹித் வெமுலாவுக்கு கூட வேண்டும் என எதிர்பார்த்தால், எந்த தளத்தில் இருந்து யாரார் இந்த போராட்டங்களுக்கு ஆதரவு அளிக்கிறார்களோ, அதே தளத்தில் இருந்து ரோஹித் குறித்து விவாதத்தை எல்லாம் மட்டு படுத்த ஆட்கள் இருக்கிறார்கள், நான் சொல்வதெல்லாம் அவர்களிடம் எதிர்பார்ப்பது அல்ல, அந்த இலக்கை அடைவது, அதிகாரமான இடங்களில் அமர்வது, இதுவும் பொது பிரச்சனை தான் என பேச வைக்கும் சூட்சமத்தை அறிவது, பேச வைப்பது!
இதற்கெல்லாம், ஒன்று படித்து விட வேண்டும்; அல்லது எதிர்த்து பேசிட வேண்டும்; இவை இரண்டும், இந்திய சமூகத்துக்கு அதி முக்கியமென்பதால் அடுத்த வருட பொங்கலுக்குள் இதற்காக என்னால் முடிந்தவையை சம்மந்தப்பட்டவர்களுக்கு நிச்சயம் செய்திடுவேன்.
இது நேற்று ஒரு நிகழ்வில் பேச தயார் செய்தது, பேச முடியாமல் போனது, விரைவில் ஒரு நூலக திறப்பிற்கு நிச்சயம், செய்த திருப்தியோடு பேசுவேன்!
யாரோட பரிதாபத்துக்கும், அக்கறைக்கும், வெளிச்சத்துக்கும் எதிர்பார்க்காமல், செய்திட வேண்டியவை இது தான்

சிறப்பான கட்டுரை
ReplyDelete