• தமிழ் சிறப்பு பதிவு

    TAMIL BEST POST

    Friday, 6 January 2017

    கவிஞர் மகுடேசுவரன் - குடைவரைக்கோவில்

    ‘குடைவரைக்கோவில்’ என்னும் அழகிய தொடர் ஆழ்ந்த பொருளுடையது. கோவில் என்பது வழிபாட்டுக்குரிய இடம். மலைக்கோவில் என்றால் மலைக்கண் அமைந்த கோவில். மலைக்கோவில் வேறு, வரைக்கோவில் வேறு. வரைக்கோவில் என்றால் என்ன ? வரை என்றால் மலை. ஆனால், மலையின் எல்லாப் பகுதியையும் குறிக்காது. மலையின் பக்கவாட்டுச் சுவர்தான் வரை. மலையின் வரம்பு அதுதான். ஒவ்வொரு மலையிலும் அது உயர்வதற்கு ஒரு செங்குத்துப் பக்கம் அமைந்திருக்கும். அதுதான் வரை. ஆடுகளில் வரையாடு என்று ஓரினம் இருக்கிறது. மேற்குத் தொடர்ச்சி மலைகளின் தனித்த உயிரினம் வரையாடுகள்தாம். அதற்கு ஏன் வரையாடு என்ற பெயர் வந்தது ? மலைகளின் பக்கவாட்டுச் சுவர்களில் அவை எப்படியோ ஏறிவிடும். அங்கே ஏறி குவட்டில் வளர்ந்திருக்கும் புற்களைக் கடிக்கும். வரைகளில் ஏறுவதால் அவை வரையாடுகள். பிற விலங்குகள் அவ்வாறு ஏறமாட்டா. வரைக்கோவில் என்பது வரைக்கண் அமைந்தகோவில். வரை என்பது மலையின் பக்கவாட்டிலுள்ள செங்குத்துப் பாறையமைப்பு. அத்தகைய வரைப்பகுதியை முகப்பாகக்கொண்டு குடைவது. அகழ்வதன்று. குடைவது. கோவிலாகக் குடைவது. அதுவே ‘குடைவரைக்கோவில்.’

    No comments:

    Post a Comment