ஏனென்றே தெரியவில்லை. தலைமை ஏற்பது என்றாலே தமிழர்களுக்கு ஒரு வெடவெடப்பு.
சிறுவயதில் விளையாடியபோதும் அப்படித்தான், எந்தப் பையன் எல்லார் வீட்டுக்கும்போய் மானம் அவமானம் பார்க்காமல் அந்தந்த வீட்டு அம்மாக்களிடம் சொல்பட்டு, விளையாட ஆள்களைத் திரட்டி வருவானோ அவனைத்தான் ‘குழுத்தலை’ ஆக்குவோம்.
தலைமைப் பண்புள்ளவர்களைத் தலைவர் ஆக்குவதேயில்லை நாம்.
“யாராவது ஒருத்தர் வாங்க...” என்று யாரேனும் அழைத்தால் ‘நீ போ’ என்று நமக்கு அருகில் உள்ளோரைத் தள்ளிவிடுவோம். ‘ஏன் என்ன ?’ என்று நாமாய் முன்வரமாட்டோம். பிறகு சொல்லிக்கொள்வோம் “எனக்கொன்றும் பயமில்லை... எதுக்கு வீண்வேலைன்னுதான் கம்முனு இருந்துட்டேன்” என்னும் பொய்க்காரணம்.
தலைமை ஏற்பது அவ்வளவொன்றும் தீமிதிப்பு வேலையில்லை. உள்ளத்திற்குச் சரியென்று பட்டதை உதட்டில் வைத்துப் பேசினால்போதும். உனக்கிட்ட பணியில் ஓயாது உழைக்கத்தான் போகிறாய்... பிறகென்ன தலைமைக்குத் தயக்கம் ?
தலைமை என்பது என்ன.... போர்க்களத்தில் முனைமுகத்தே முதல் ஆளாய் நிற்றலா ? இல்லை. பெருங்கூட்டத்தில் நாம் பெயர் அறிய நிற்றல்.
எதுவாயினும் முதல் தலையாய் நம் தலை உருளும் என்பதே தலைமைக்குத் தயங்கும் அச்சம். உருளட்டுமே... அப்படி எத்தனை தலைகள்தாம் உருண்டுள்ளன ?
தலைமை என்றால் எவ்வொரு வன்முறையும் தம்மீதே பாயும் என்றும் நடுக்கம். பாயட்டுமே.... தமக்குப் பின்னுள்ளோர் நல்வாழ்வு பெறவேண்டி ஒருவர் வன்முறைக்கு மார்பைத் திறப்பதில் தவறில்லையே... ஆனால், அந்த வீர உணர்ச்சியே இன்று மங்கிவிட்டது. கதவைப் பூட்டி வாழ்ந்து பழகிவிட்டோம். நால்வரோடு பழகுவது குறைந்துவிட்டது.
உண்ணும் சோற்றுக்கு ஊறு நேருமோ என்னும் கவலை. ஆறிலும் சாவு நூறிலும் சாவு என்ற துணிவு தொலைந்துவிட்டது. யார் கண்ணிலும் படாமல், ஏதொன்றையும் எதிர்க்காமல், அப்படியே பொட்டாட்டம் பூச்சியாட்டம் வாழ்ந்து மறைவதில் நமக்கு அளப்பில்லா நாட்டம் தோன்றிவிட்டது.
நம் தலைவன் இனி நம்மிடையே தோன்றமாட்டானோ ? இனியொரு புதிய பொதுத்தலைவன் என்பவன் கனவாய்க் கற்பனையாய்ப் போவானோ ?

No comments:
Post a Comment