நான்கு நாட்களாக கடுமையான காய்ச்சல் இருந்தது, மருந்து கொடுப்பதில் இருந்து பிரத்தேயகமான உணவு செய்து கொடுப்பது வரை மனைவி கவனித்து கொண்டார்கள், தொற்று காய்ச்சல் என தெரிகிறது, எனக்கு ஜுரம் வந்து மூன்றாவது நாள் குழந்தைக்கு வந்தது, குழந்தையும் பார்த்து கொண்டு, என்னையும் கவனித்து கொண்டு, அலுவலுக பணியையும் பார்த்து கொண்டு சமாளித்தார் மனைவி!
சரியாக எனக்கு குணமாக, நேற்று மனைவிக்கு காய்ச்சல், நான்கு நாட்களாக என்னையும் குழந்தையும் சமாளிக்க முடிந்த அவர்கள் படுத்த படுக்கையானதும், வீடே ஸ்தம்பித்து போன போல இருந்தது, என்னால் முடிந்த வேலையை செய்தேன்!
குடும்ப அமைப்பில் பெண்களை சார்ந்து அதிக Dependent ஆகி இருக்கிறோம், என் அப்பவெல்லாம் என் அம்மா ஒரு நாளுக்கு மேல் காய்ச்சலால் படுத்தால் நொந்தே போய் விடுவார், அந்த கோவம் வேறு எப்படியெல்லாமோ வெளிப்படும், இந்த தலைமுறை அதில் இருந்து கொஞ்சம் முன்னேறி வந்திருப்பதாக நினைக்கிறன், காரணம் பணிசுமையில் பங்கு எடுத்து கொள்வதால் இருக்கலாம்!
ஐம்பது வயது தாண்டினால், ஒரு பெண்ணால் கணவன் இல்லாமல் வாழ்க்கையை கடந்து விட முடிகிறது, ஆனால் ஒரு ஆணுக்கு துணையின் அவசியம் அந்த காலத்தில் தான் இரட்டிப்பு ஆக ஆரம்பிக்கிறது, திருமணம் செய்து கொள்ளாதவர்கள் இந்த காலத்து தனிமையில் இருந்து தப்புவது தான் சிரமமும் கூட,
அதே போல ஒரு பெண்ணுக்கு இளம் பருவத்தில் துணை அவசியமென சொல்கிறது இந்த அமைப்பு, அதற்கு முக்கிய காரணம் ஒரு இளம்பெண், insecure சமூகத்தில் காலம் கடத்துவது குறித்து அஞ்சுகிறது,
இவையெல்லாம் நடப்பு காலத்தில் இருக்கும் social standards
விஷியத்துக்கு வரேன்,
என் மனைவி ஒரு குடும்பத்தையும் கவனித்து கொண்டு, அலுவல் பணியையும் பார்த்து கொண்டு, கொஞ்சம் கூடுதல் கவனம் எடுத்து என்னை கவனிக்க வேண்டிய நேரத்திலும் அவர்களால் கவனிக்க முடிகிறது என்றால் ஒரு பெண்ணின் potential power என்னவென்பதை கவனியுங்கள், இத்தகைய செயல்திறன் இருந்தும், நள்ளிரவு எனக்காக மருந்து வாங்க போக வேண்டுமானால், வெளியில் சாதாரணமாக போய் வரும் இந்த காலத்திலும் பெண்களுக்கு இரவு என்பது ஒரு threat ஆக தான் இருக்கிறது.
அதே குடும்ப அமைப்பில் ஒரு பெண் படுத்த படுக்கையாகி விட்டால், அதை ஈடு கட்ட முடியாத நிலையில் ஆண் இருக்கிறான், குடும்ப அமைப்பில் அவனின் potential power எந்த நிலையில் இருக்கிறது என்பதை கவனியுங்கள், ஆனால் எந்நேரமும் அவனால் வெளியே இயங்க முடிகிறது, easy accessible!
ஆக இந்த நிலைக்கோட்டில் இருந்து சமூகத்தை அணுகினால், ஆண்களுக்கு சமூகத்தின் உட்புறமான குடும்ப அமைப்பில் அதிக ஈடுபாடும், பெண்களுக்கு சமூகத்தின் வெளிப்புறத்திலும் அதிக ஈடுபாடும் தேவை படுகிறது. இதை அடைய வேண்டிய இன்றைய சூழலில், பெண் எங்கே செல்வது உத்தமம், எந்த நேரத்தில் செல்வது உத்தமம், எங்கே செல்ல கூடாது என விதி விதிப்பது, புரிதலற்ற ஒரு சமூகத்தை தான் உருவாக்கும் தவிர, நாம் உருவாக்கும் விதிகள் தவறு செய்கிறவர்களுக்கு தான் என்றுமே சாதமாக இருக்கும்!
என் வீட்டில் இருந்து ஒரு பெண் வெளியே, எங்கோ எதற்கு போகிறாள், அவள் மருந்து வாங்க வந்தாளா, பார்ட்டி முடித்து விட்டு வருகிறாளா, சினிமா முடித்து விட்டு வருகிறாளா என்கிற காரணங்கள் ஊருக்கு தேவை இல்லாதது. முதலில் சுதந்திரமான ஒரு தளத்தை ஏற்படுத்துவோம், நாம் எவ்வளவு பாதுகாப்பாய் இருந்தாலும் நம்மை மீறி குற்றச்செயல்கள் செய்வதற்கு ஆண் பெண் என பாலின பேதத்தை தாண்டி மனிதர்கள் இருந்து கொண்டு தான் இருப்பார்கள், என்னை கேட்டால் அது இரண்டாம் கட்டமாக பேச பட வேண்டிய பிரச்சனை, சமூகமும் சட்டமும் ஒன்று சேர்ந்து செயல் பட வேண்டிய தளம், ஆனால் அதற்கு முன் பாதிக்க படாமலே கருத்து சொல்லும் தளம் என்று ஒன்று நம்மிடம் உண்டு, அங்கே தான் ஒரு சமூகத்தின் கருத்தியல் நிறுவப்படுகிறது. விவாதத்திலும் இணையத்திலும், தொலைக்காட்சியிலும், எல்லா தளத்திலும் தவறை தவறென்று முதலில் பதிவு செய்வோம்!
சம்பிரதாயமாக பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இரங்கலை சொல்லி விட்டு, "ஆனாலும் அந்த பெண் பார்ட்டிக்கு போக தேவை இல்லை, புத்தாண்டு கொண்டாட்டம் கொண்டாட தேவை இல்லை, அது அவசியமில்லாதது" என பேசுபவர்கள் தான் என்னை கேட்டால் முதல் கட்ட குற்றவாளிகள்!
பெண்கள், சொல்லப்படுகிற விதியில் இருந்து விலகி நடந்தால், இந்த சமூகம் அவர்களிடத்தில் சலுகை எடுத்து கொள்ள தான் செய்யும் என்கிற மறைமுக ஒப்புதல் வாக்குமூலம் அது.
பார்ட்டிக்கு சென்ற பெண் பாலியல் சீண்டலுக்கு ஆளானால்.
பள்ளிக்கூடத்தில் இருந்து வீட்டுக்கு திரும்பிய பெண் பாலியல் சீண்டலுக்கு ஆளானால்,
என்கிற இரு செய்தியில், பள்ளிக்கு சென்று வந்தவள் மீது கரிசனமும், பார்ட்டிக்கு சென்றவள் மீது அங்கே நடந்த குற்றத்துக்கு நம்மை அறியாமலேலேயே ஒரு நியாயத்தை முன் வைக்கிறோம் நாம், எவ்வளவு கேவலமான விஷயம் இது? ஒரே குற்றச்செயல், ஒருவள் எங்கே சென்று விட்டு வந்தாள் என்பதை பொறுத்து தான் பெண்ணுக்கு நீதி சொல்லுமா இந்த மனித மனம்?
குடித்து விட்டு வீடு வந்த சேராத தன் அப்பாவை தேடி மதுபான கடைக்கு போகும் அந்த பெண்,
வேலையில் இருந்து திரும்பாத தன் அம்மாவை தேடி போகும் தந்தை இல்லாத அந்த பெண்,
திருமணம் வேண்டாம் என சூழல் கருதியோ, விரும்பியோ தனியே வாழும் அந்த பெண்,
கணவனுக்கு மருந்து வாங்க வெளியில் வரும் அந்த பெண்,
இரவு நேர வேலை பார்க்கும் அந்த பெண்,
இரவை ஆண்களே மெச்சி பேச, இரவு ஆண்களுக்கானதா? ஏன் எங்களுக்கு இல்லையா என ஆர்ப்பாட்டம் இல்லாத அமைதியான இரவை ரசிக்க வெளியே வரும் அந்த பெண்,
நெடு நாள் கழித்து சந்திக்கும் நண்பர்களோடு நேரம் தெரியாமல் பார்ட்டி கொண்டாடி விட்டு வீடு திரும்பும் அந்த பெண் என,
ஒவ்வொரு பெண்ணுக்கும் எங்கே, எதற்காக, எப்பொழுது போக வேண்டும் என்பதற்கான அவர்களுக்கு உண்டான நியாயம் இருக்கு, நம் தராசில் இருந்து அதற்கு மதிப்பிட கூடாது. ஒழுக்கம், உடல் நலம் பேணுதல், Safety Measures பாலின வேறுபாடு தாண்டி அனைவருக்குமே பொது, அதை மீண்டும் மீண்டும் பெண்களுக்கு வலிமையாக சொல்லி சொல்லி, அதன் மூலம் இந்த சமூகம் செய்வதெல்லாம் ஆண்களை அதப்பாய் வளர்ப்பதே!
இருள் சூழ்ந்த குகையில் ஒரு விளக்கு போதாமல் போனால், நாம் செய்ய வேண்டியது அவ்விடத்தை குறித்து அச்சம் ஏற்படுத்துவதல்ல, அங்கு விளக்குகளை குவிப்பது. இருளின் பெரும்பான்மையை பார்த்து அதை இருளாகவே வைத்திருப்பதோடு அல்லாமல், அங்கே ஒளிந்திருக்கும் ரகசியத்தை உடைக்கப்படாமல் வைத்திருந்தால், இருளில் வாழ ஏற்கனவே பல காலமாய் பழக்கி கொண்டிருந்தவனுக்கு அது ஏதுவாய் சாதகமாய் இருக்குமே ஒழிய, அவ்விடம் நமக்கு அகப்படாது, இருள் அகலாது!

No comments:
Post a Comment