என் மகள் நடக்க ஆரம்பித்து இருக்கிறாள், விழுந்து எழுந்து நடப்பது அவளுக்கு வலித்ததை போல தெரியவில்லை, ஆனால் ஒவ்வொரு முறை விழும் போதும் அவள் நடக்காமலேயே இருந்து விடலாமே என நினைக்கும் அளவு பதறுகிறது,
பக்கவாட்டுச் சுவரில் சமயத்தில் 'மொத்தென்று' இடித்து சில நேரம் அழுகிறாள், சுவரில் பஞ்சை ஒட்டி விடலாமா என கேட்க மனைவி நக்கலாய் பார்க்கிறார், கட்டிலில் தூங்கி கொண்டிருக்கும் போது சிறுநீர் கழித்து விட்டு வருகிற அந்த கால இடைவெளியில் கூட அவளை தனியே விட பயந்து, விழித்து கீழே விழுந்து விட போகிறாள் என பதறி சொட்டு சிறுநீரை கூட உதறாமல் கால்சட்டையில் விட்டபடி ஓடி வந்து பார்க்க வேண்டியதாய் இருக்கு,
அவளை யாரேனும் விளையாட்டாய் அதட்டினாலும் அர்த்தமில்லாத கோவத்தை கட்டுப்படுத்த இயலவில்லை, மூன்று பேத்திகளை வளர்த்த அம்மா 'ஊரில்லாத நூதன குழந்தையை பெற்றெடுத்து வைத்திருக்கிறான்' என சொல்லுமளவு தான் நூதனமாய் வளர்க்கிறேன் என் மகளை, அவள் எனக்கு நூதனமே தான், எல்லா அப்பாவுக்குமே, எல்லா அம்மாவுக்குமே பிள்ளைகள் நூதனம் தான்.
காதல் எந்த புள்ளியில் காமமாக உருமாறி இந்த கரு உருவானது என்பதையறியாது உருவான எல்லா குழந்தையின் பெற்றோருக்குமே இருக்கும் சராசரி உணர்வு குவியல்கள் தான் குழந்தைகள்,
இப்படியெல்லாம் வளர்க்கப்பட்ட மகள் கலப்பு திருமணம் செய்கிறாள் என பெற்றோரால் கொலை செய்யவும் முடியுமா? முடிந்திருக்கிறது, செய்து இருக்கிறார்கள், அதை செய்த பெற்றோருக்கு தூக்கு தண்டனையும் விதிக்கப்பட்டு இருக்கிறது, சட்டத்துக்கு எதிராக ஒரு கொலை, சட்டமே செய்யும் பதில் கொலை!
இனி அந்த மகள் வரப்போவதில்லை, ஆனால் நடந்து முடிந்த உலக சம்பவங்கள் அனைத்துமே வாழ போகிற சமூகத்துக்கு ஒரு செய்தியை இட்டு செல்கிறது, அதை நாம் கணக்கில் கொண்டோமா, கொள்கிறோமா என்பதில் தான் வாழ்க்கைக்கான அர்த்தமிருக்கிறதாக நினைக்கிறன்.
சாதிக்காக கொலை செய்தவன் வெறும் கருவி, அவனை இயக்கியது சமூகம், நேரிடையாக குற்றம்சாட்டப்பட முடியாதென்றாலும் சர்வ நிச்சயமாக இந்த கொலைக்கு சமூகம் தான் காரணம், அடுத்தவன் வீட்டுக்கு கௌரவ பாடமெடுக்கும் ஒவ்வொருவனும் காரணம், சாதியில்லை என்றால் இந்த தேசமில்லையென சொல்லும் ஒவ்வொருவனும் காரணம், சாதி கொலை நடக்கும் போது மௌன சிரிப்பு சிரிக்கும் ஒவ்வொருத்தரும் காரணம்.
கொன்றாலும் கொல்வேன் காதலை ஒப்புக்கொள்ளவே மாட்டேன் என வாழும் பெற்றோர்கள் இருக்கிறார்கள் என தெரிந்தும், அப்பா, அம்மா சம்மதமில்லாமல் திருமணம் கூடாது என தொலைக்காட்சியில் வியக்கணம் பேசும் நவீன சாதி வெறியர்களும் காரணம், இவர்களெல்லாம் இருக்கும்வரை அடுத்த கொலைக்கான முதலீடு செய்யப்பட்டு கொண்டே தான் இருக்கும், கொலைகள் நடந்து கொண்டே தான் இருக்கும், குற்றவாளிகள் வெறும் ஆயுதங்களை இயக்கியவர்களாக இருக்க, அவர்களை இயக்குகிறவர்கள் புன்சிரிப்போடு விதைத்து கொண்டே தான் இருப்பர்!

No comments:
Post a Comment